‘மிஸ் இந்தியா’பட்டம் பெறாதது வருத்தம் – மெட்ராஸ் படத்தின் கதாநாயகி கேத்ரீன் தெரசா.

மெட்ராஸ் படத்தின் கதாநாயகி. கண்களை உருட்டியே காதலை வெளிக்காட்டிய கண்ணழகி. மெட்ராஸ் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ருத்ரமாதேவி திரைப்படத்தின் வெற்றி கேத்ரீன் தெரசாவை தமிழ் ரசிகர்களின் மனங்களில் ஆழப்பதிய வைத்துள்ளது. இந்த தொடர் வெற்றியால் மகிழ்ச்சியின் எல்லையில் இருக்கும் கேத்ரீனிடம் ஜாலி பேட்டி…

* உங்களைப் பற்றி?

‘நான் பிறந்தது கேரள மாநிலம் கோட்டயம். வளர்ந்தது துபாய். 14 வயதில் பேஷன் டிசைனிங் நண்பர்களுக்கு உதவி செய்வதற்காக மாடலாக போஸ் கொடுத்தேன். அது அப்படியே மாடலிங் உலகத்துக்குள் என்னை அழைத்து சென்றுவிட்டது. நிறைய விளம்பரப் படங்களில் நடித்தேன். மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து, நான்கு வருடத்திற்குள்ளாக 12 படங்களை முடித்து விட்டேன். நல்ல முன்னேற்றம்…!’ என்று புன்னகைத்தார்.

* ருத்ரமாதேவியில் அனுஷ்காவுடன் நடித்த அனுபவம்?

‘ருத்ரமாதேவி திரைப்படம், இந்தியாவின் 3-டி சரித்திரப் படம். அனுஷ்காதான் ருத்ரமாதேவியாக நடித்திருக்கிறார். எனக்கு இளவரசி கதாபாத்திரம். அல்லு அர்ஜூனின் காதலியாக நடித்திருக்கிறேன். அனுஷ்கா ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருப்பார். குறிப்பாக நானும், அனுஷ்காவும் போட்டி போட்டு ஆடுவது போன்று, ஒரு நடனம் இருக்கிறது. எவ்வளவு சோர்வானாலும், ‘எக்ஸ்பிரஷனும் நடனமும் மேட்ச் ஆகியிருக்கா?’னு மானிட்டர்ல அவங்களே பார்த்து திருப்தியான பிறகுதான் கிளம்புவாங்க. சின்னச் சின்ன குறிப்புகளை எழுதிக்கொண்டு, பரீட்சைக்கு தயாராவது போல்தான் ருத்ரமாதேவி படத்திற்காக உழைத்தார். படக்குழுவின் உழைப்புகளை 3டி தொழில்நுட்பத்தில் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது.’

* மெட்ராஸ் படத்தைப் போல் யாரிடமாவது காதலை வெளிப்படுத்த நினைத்திருக்கிறீர்களா?

(வெட்கத்தோடு) ‘நினைத்திருக்கிறேன்! சிறுவயதில் டைட்டானிக் படத்தை பார்த்தபோது, அதில் கதாநாயகனாக வரும் ‘லியானர்டோ டி காப்ரியோ’வை சந்தித்து காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று ஏங்கியதுண்டு.’

* பிடித்தமான பொழுதுபோக்கு?

‘நான் ஒரு பாடகி. நிறைய மேடைகளில் பாடி இருக்கிறேன். ஆனால், இதுவரை சினிமாவில் பாடியது இல்லை. வாய்ப்பு கிடைத்தால், அதையும் சரிவர பயன்படுத்திக்கொள்வேன்.’

* படித்ததில் பிடித்தது?

‘கிரிகோரி டேவிட் ராபர்ட்ஸ் எழுதிய ‘சாந்தாராம்’ நாவல் என்னுடைய விருப்பமான புத்தகம். 900 பக்கங் களுக்கு மேல் இருந்தாலும் படிக்க ஆரம்பித்துவிட்டால் நிறுத்த மனம் வராது. அடுத்தது டீன் கூன்ட்ஸ் எழுதிய ‘ஒன் டோர் அவே ப்ரம் ஹெவன்’ நாவல்.’

* பிறந்த நாள், வருட பிறப்பு போன்ற தினங்களில் ரெசலூசன் (தவறுகளை திருத்திக் கொள்ளுதல்) எடுக்கும் பழக்கம் உங்களுக்கு உண்டா?

‘அப்படி எதுவும் இல்லை. திடீரென்று ஒரே நாளில் திருந்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும், ‘யாரையும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். வீட்டை ரொம்ப மிஸ் செய்யும் அளவுக்கு, பயங்கர பிஸியாக இருக்க வேண்டும்’ என்ற ஆசை என்னுடைய மனதில் அடிக்கடி வருவது உண்டு.’

* உங்களின் பகல் கனவு?

‘என்னுடைய பகல்.. இரவு.. கனவுகள் எல்லாமே ‘மிஸ் இந்தியா’ டைட்டிலை வெல்வதுதான். ஆனால், அழகி போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே நடிகையாகி விட்டேன். ‘மிஸ் இந்தியா’ பட்டத்துடன் ராம்ப் வாக் செய்யாதது வருத்தமாகத்தான் இருக்கிறது. இருப்பினும் நடிகையானதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.’

* திரைத்துறையில் போட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?

‘போட்டி எப்போதும் நல்ல விஷயம் தான். ‘குடும்ப பெண்ணாகவே நடிப்பேன்’ என்று அடம்பிடிக்க மாட்டேன். ஆனாலும் உடைகளில் கிளாமர் (ஆபாசம்) எல்லை என்ன என்பதை உணர்ந்து வைத்திருக்கிறேன். கிளாமர், நடிப்பு இரண்டுக்கும் முக்கியத்துவம் தருவேன். எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் நடித்துக்கொடுத்து ‘பொண்ணு பின்னுது’னு பேர் வாங்கணும். அது போதும்.’

* கேத்ரீன் தெரசாவின் நிஜ கதாபாத்திரம் எப்படிப்பட்டது?
‘புன்னகை புயல் வீசும் ஜாலியான கதாபாத்திரம்.’

Katarn 1 Katarn 2 Katarn

4,674 total views, 1 views today